கந்த சஷ்டி


கந்த சஷ்டி: தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.

சஷ்டி (சட்டி) விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.

ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.

16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன்.

சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக தீராத வழக்குகள், 14 ஆண்டுகளாக தீராத நோய் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர்.

இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும். இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாக பொருள் கிடைக்கலாம்.

இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.

ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.

ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.