தலைமலை கோயில்


திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் நீலியாம்பட்டியில் தலைமலை உள்ளது. மலை உச்சியில் சஞ்சீவிராய பெருமாள், வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி, அலமேல் மங்கை தாயார், கருப்பண்ண சுவாமி, ஆஞ்சநேயர், கிருஷ்ணன், சப்த கன்னியர் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சஞ்சீவிராய பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை நேற்று வழிபட்டனர். அப்போது மலை உச்சியிலிருந்து 3 ஆயிரம் அடி பள்ளத்தின் அருகே சஞ்சீவிராய பெருமாள் கோயிலின் வெளிப்புறம் அமைந்துள்ள கால் அங்குல விளிம்பில் கிரிவலம் சுற்றி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: தலைமலை மீது அமைந்துள்ள பெருமாள் கோயில் தரைமட்டத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. மலை ஏறுவதற்கு முறையான பாதைகளோ படிகட்டுகளோ இல்லை. கரடுமுரடான மலை பாதையில் சிரமப்பட்டு ஏறி சென்றால் தான் சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.

                            திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் சிறப்பாக நடைபெறவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும், குடும்பம் செழிப்புடன் வாழவும் தலைமலை சஞ்சீவிராய பெருமாளிடம் வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறவும், நிறைவேறிய வேண்டுதலுக்கு பெருமாளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கிரிவலம் சுற்றுகிறோம். தவறி கீழே விழுந்தால் மரணம் நிச்சயம் என்ற போதிலும் பெருமாள் மீது கொண்டுள்ள பற்றினாலும், அதீத நம்பிக்கையாலும் பக்தர்கள் கிரிவலம் சுற்றுவது வழக்கமாக உள்ளது. பெண்களும் இந்த கிரிவலத்தை சுற்றி வருவது உண்டு.