கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயம், கரூர்


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது. வரலாறு : பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து , வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு, என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய் என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான்.இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது. புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட பதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த தலம்.திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதார தலம். முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்த புராதான சிறப்பு பெற்ற தலம் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடனான முருகப்பெருமானது திருமண வைபவத்திற்கு முசுகுந்தனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக இத்தல புராணங்கள் கூறுகின்றன.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் என்ற சித்தர் வாழ்ந்து பேறு அடைந்த கோயில். இவர் ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.இங்குள்ள ஆனிலை எனும் லிங்க வடிவமானது முற்றிலும் சுயம்பு மூர்த்தியாகும். புற்றிடங்கொண்ட ஈசரை முதலில் வழிபடும் பெருமை பெற்றவராக பிரம்மதேவர் குறிப்பிடுகிறார். காமதேனுவால் வழிபடப்பட்ட சிவாலயம் இது. காமதேனு வழிபடும்போது குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் ஏற்பட்ட குழிவான தழும்பு வடிவம் உள்ளது.கருவூர் சித்தர் : பதிணென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். பற்றற்றவராக வாழ்ந்திருந்த இவர் மீது அந்தண இனத்தைச் சார்ந்தவர்கள் வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் குறை கூற, மன்னன் இவரிடம் எக்குறையும் காணாது, குறை கூறியவர்களைத் தண்டித்தான். மீண்டும் மீண்டும் அந்தணர்கள் தொல்லை தரவே இவர் தைப்பூசத்தன்று ஆனிலையப் பருடன் ஐக்கியமானதாகக் கூறப்படுகிறது.