அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் ஆலயம், வெஞ்சமாங்கூடலூர், கரூர்


மூலவர் : கல்யாண விகிர்தீஸ்வரர்
தாயார்: பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினி
வரலாறு தேவர்களின் தலைவன் இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகையின்பால் ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன், ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டான் . வஞ்சகமாக சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். உடனே , இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனை, தன் கணவர் என்றெண்ணி அகலிகை, பணிவிடைகள் செய்தாள். இதனிடையே ஆற்றிற்கு சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார்.
ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன், பூனை வடிவம் எடுத்து தப்ப முயற்சித்தான். நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர், அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சாபம் கொடுத்தார் . சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான். இத்தலத்திற்கு வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்று கூறினார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே, இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார் என்பது இதன் வரலாறு .
முருகன் சிறப்பு: பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார், வெஞ்சக்கூடல் பெருமானே என்று பதிகம் பாடியிருக்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவருக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் மீண்டும் இணைந்து தாம்பத்யம் சிறக்கும் என நம்புகிறார்கள்.
வேண்டுதால் :புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.
கோவிலின் சிறப்பு : கருவறையில் ,விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.