அருள்மிகு கடம்பவனேஸ்வரர் ஆலயம், குளித்தலை, கரூர் மாவட்டம்


மூலவர் : கடம்பவனேஸ்வரர்
தாயார்:பாலகுஜாம்பாள்

ஆலயத்தின் சிறப்பு


இங்கு சிவன் வடக்கு நோக்கி சுயம்புலிங்கமாக இருப்பது மிகவும் சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பாக குறிப்பிடுகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 65 வது தேவாரத்தலம் ஆகும்.

கோவிலின் அமைப்பு:


இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் . இங்குள்ள விமானம் திரிதளம் அமைப்பு உடையது . ராஜகோபுரம் 5 நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது . சிவன் வடக்கு நோக்கி இருப்பதால், கோஷ்டத்தின் பின்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பு. வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகனையும், நவக்கிரகத்தில் செவ்வாயையும் வழிபடுகின்றனர். அருகே சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
Use

சாப விமோச்சனம் :

தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பிகையிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டி கொண்டனர் . அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர்.


அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள் கூறினார் . அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர் அதன்படி சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.


முருகனின் சிறப்பு :


சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு ஈஸ்வரனை வழிபட்டுள்ளார். பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதி அமையபெற்று இருக்கிறார். "ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற சிறப்பான அமைப்புடையவர்' என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார். இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருப்பது இன்னும் சிறப்பு. இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் காணக்கிடைக்கிறது. இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.